கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இருப்பதை ஒப்புக்கொண்ட பிரதமர் ட்ரூடோ
கனடாவில் காலிஸ்தான் போராளிகள் இருப்பதை அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
கனடாவில் காலிஸ்தானிய இயக்கத்துக்கு ஆதரவு வழங்குவோர் இருக்கின்றனர் என்று எதிர்பாரா விதமாக ட்ரூடோ கூறினார். எனினும், அவர்கள் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தைப் பிரதிநிதிக்கவில்லை என்றும் அவர் உடனடியாக சுட்டினார்.கனடியத் தலைநகர் ஒட்டாவாவில் இருக்கும் அந்நாட்டு நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது ட்ரூடோ அவ்வாறு சொன்னார்.
காலிஸ்தானிய பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவு மோசமடைந்துள்ளது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார், 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் இருக்கும் சரே நகரில் உள்ள சீக்கிய ஆலயத்துக்கு வெளியே கொல்லப்பட்டார்.அவர் கொலை செய்யப்பட்டதில் இந்தியாவுக்குத் தொடர்பு இருக்கக்கூடும் என்று ட்ரூடோ குற்றஞ்சாட்டியதையடுத்து இருநாடுகளுக்கு இடையிலான அரசதந்திர உறவில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டது.
கனடாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவாளர்கள் இருக்கின்றனர், ஆனால் அவர்களும் ஒட்டுமொத்த கனடிய இந்து சமூகத்தைப் பிரதிநிதிக்க மாட்டார்கள் என்று
ட்ரூடோ எடுத்துரைத்தார்.
“கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால், அவர்கள் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தைப் பிரதிபலிக்கமாட்டார்கள். அதேவேளை, மோடி அரசாங்க ஆதரவாளர்களும் கனடாவல் இருக்கின்றனர். அவர்களும் இந்து சமயத்தைச் சேர்ந்த கனடிய சமூகத்தைப் பிரதிநிதிக்கமாட்டார்கள்,” என்று அவர் சொன்னார்.
இவ்வாரத் தொடக்கத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் கனடாவின் பிரேம்ப்டன் நகரில் உள்ள இந்து கோயிலில் பக்தர்களுடன் மோதினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் காலிஸ்தானிய கொடியை ஏந்தினர்.
அச்சம்பவத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோயிலுக்கு வந்த பக்தர்களைத் தாக்கி வன்முறையில் ஈடுபட்டனர். கோயிலில் இந்தியர்கள், கனடியர்கள் என இருநாட்டு குடிமக்களையும் ஈர்த்த அரசதந்திர நிகழ்வின்போது மோதல் ஏற்பட்டது.அச்சம்பவம் பதிவான காணொளிகள் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு பலரால் பகிரப்பட்டன. ட்ரூடோ அந்தத் தாக்குதலைக் கண்டித்துப் பேசினார்.