ஆபாச காணொளிகள் தடுப்பு நடவடிக்கை; இணைய நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலியா 6 மாதங்கள் அவகாசம்
சிறார்கள் ஆபாசக் காணொளிகளைப் பார்க்காமல் இருக்க இணைய நிறுவனங்கள் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அந்த கட்டமைப்பிற்கான திட்டத்தை ஆறு மாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.வரும் அக்டோபர் மாதம் 3ஆம் திகதிக்குள் நிறுவனங்கள் கட்டமைப்பிற்கான திட்டத்தை தர வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் இணையப் பாதுகாப்பு ஆணையர் கூறினார்.
மனதளவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் தகவல்களை சிறார்கள் பார்க்காமல் இருக்க இது உதவும் என்று கூறப்படுகிறது.தகுந்த வயதுடையவர்களுக்குத்தான் சில தகவல் போய் சேர வேண்டும் என்பதில் ஆஸ்திரேலியா கவனமாக உள்ளது. உயிரை மாய்த்துக்கொள்வது, சாப்பிடுவதில் மருத்துவரீதியாகப் பிரச்சினையை எதிர்கொள்வது போன்ற தகவல்களுக்கும் அந்த கட்டமைப்பு பொருந்தும்.
ஏற்கெனவே இணைய நிறுவனங்கள் பயங்கரவாதம் சிறார்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகியவற்றை இணையத்தில் தடுக்க கட்டமைப்பை உருவாக்கின. தற்போது இரண்டாம் கட்டமாக புதிய கட்டமைப்பை உருவாக்க ஆஸ்திரேலியா அழைப்புவிடுத்துள்ளது.
வயதை சரிபார்ப்பது, தேவையற்ற பாலியல் தகவல்களை மறைப்பது, மென்பொருள் மூலம் தகவல்களைச் சரியாக வடிகட்டுவது, பெற்றோர், தங்கள் பிள்ளைகள் பார்க்க வேண்டிய தகவல்களைக் கட்டுப்படுத்துவது போன்றவை கட்டமைப்பில் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர்.
“குழந்தைகள் வன்முறை மற்றும் ஆபாசக் காணொளிகளால் ஈர்க்கப்படுவது பல பெற்றோர்களுக்கும் பராமரிப்பாளர்களுக்கும் பெரிய கவலையாக உள்ளது. அதனால் இதைத் தடுப்பதில் இணைய நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உண்டு,” என்று இணையப் பாதுகாப்பு ஆணையர் ஜூலி இன்மான் கிராண்ட் தெரிவித்தார்.
கூகள், மெட்டாவின் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் நிறுவனங்கள் புதிய கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர்களது பேச்சாளர்கள் மூலம் தகவல் வெளியிட்டன.எக்ஸ் , ஆப்பிள் உள்ளிட்ட சில நிறுவனங்கள் இதுகுறித்து உடனடியாகத் தகவல்கள் ஏதும் வெளியிடவில்லை.