அதிபர் தேர்தல் :பைடன் குறித்த கவலையை வெளிப்படுத்தியுள்ள ஜனநாயகக் கட்சியினர்
இவ்வாண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடும் நிலையில் இருக்கிறாரா என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
அதன் தொடர்பில் தங்களுக்கிடையிலான பதற்றத்தை ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் சிலர் வெளிப்படையாகக் காண்பித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பைடன் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக்கொள்ளவேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குரல் கொடுக்கின்றனர்.
ஜனநாயகக் கட்சித் தலைவர் பலர் உட்பட அக்கட்சியினர் பெரும்பாலோர் பைடனுக்கு ஆதரவு தெரிவித்துதான் வருகின்றனர். அவருக்கு எதிராகக் குரல் கொடுத்த சிலரும் பொதுவாக முக்கியப் பொறுப்புகளில் இல்லாதவர்களே.
எனினும், அதிபர் தேர்தலை முன்னிட்டு குடியரசுக் கட்சியின் வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனல்ட் டிரம்ப்புடனான விவாதத்தின்போது பைடன் தடுமாறியதைத் தொடர்ந்து கேள்விகள் எழுந்துள்ளன.
டெக்சஸ் மாநிலத்துக்கான ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதியான லோய்ட் டொகட், டிரம்ப்புடன் ஒப்பிடும்போது தமக்கு இருக்கக்கூடிய பலவீனங்களை ஈடுகட்ட பைடன் விவாதத்தின்போது செயல்படுவார் என்று எதிர்பார்த்ததாகவும் அதற்குப் பதிலாக பைடன் தேர்தல் களத்திலிருந்து விலகவேண்டும் என்ற நிலைதான் எழுந்ததாகவும் செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை 2) அறிக்கை மூலம் குறைகூறினார்.
ரோட் தீவுக்கான செனட்டர் ஷெல்டன் வைட்ஹவுஸ், “இது (விவாதம்) உண்மையிலேயே நம்பமுடியாத ஒன்றாகும். அவரின் தற்போதைய நிலையை மட்டும் இது காட்டவில்லை,” என்று உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றிடம் கூறினார்.
இந்நிலையில், ஒருவேளை திரு பைடன் விலகிக்கொண்டால், துணை அதிபர் கமலா ஹாரிஸ், கலிஃபோர்னியா ஆளுநர் கேவின் நியூசம், மிச்சிகன் ஆளுநர் கிரெட்ச்சன் விட்மர், பென்சில்வேனியா ஆளுநர் ஜோஷ் ஷப்பிரோ உள்ளிட்டோரில் ஒருவர் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடக்கூடும் என்று கூறப்படுகிறது.