“கடற்படைக்குப் பாராட்டு” – திருகோணமலையில் ஜனாதிபதி உரை
மரியாதைக்குரிய, ஒழுக்கமான மற்றும் துணிச்சலான படையான கடற்படையில் இணைந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

திருகோணமலையில் (13) சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 40 ஆவது ஆட்சேர்ப்பில் உள்வாங்கப்பட்ட இடைநிலை அதிகாரிகள், 65 ஆவது ஆட்சேர்ப்பில் உள்வாங்கப்பட்ட இடைநிலை அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகள் பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறிச் செல்லும் விடுகை அணிவகுப்பில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த நாட்டில் மிகவும் மரியாதைக்குரிய, ஒழுக்கமான மற்றும் துணிச்சலான படையான கடற்படையில் இணைந்த அனைவருக்கும் வெற்றிகரமான தொழில் வாழ்க்கைக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பதவியைப் பொறுத்து வெவ்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டாலும், ஒரு நிலையான அரசுக்கு ஒவ்வொரு பொறுப்பும் அவசியம் என்றும், தமக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுவதன் மூலம் மாத்திரமே ஒரு நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என்றும், ஒவ்வொரு பொறுப்பும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அளிக்கப்படும் பங்களிப்பின் ஒரு பகுதியாகக் கருதப்பட வேண்டும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்,அண்மைய அனர்த்தத்தின் போது மக்களின் உயிரைக் காப்பாற்றுவதிலும் நிவாரண சேவைகளை வழங்குவதிலும் கடற்படை ஆற்றிய பங்களிப்பையும் பாராட்டியதுடன், மக்களின் உயிரைக் காப்பாற்ற தமது உயிரைத் தியாகம் செய்த அனைத்து அதிகாரிகளையும் இங்கு நன்றியுடன் நினைவு கூறுகின்றேன் எனவும் அவர் மேலும் கூறினார்.




