பங்களாதேஷ் பிரதமருக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து
பங்களாதேஷில் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஷேக் ஹசீனாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஷேக் ஹசீனாவுக்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பங்களாதேஷ் மக்களுக்கு ஷேக் ஹசீனா வழங்கிய சேவையும் தொலைநோக்கு பார்வையும் கொண்ட தலைமைத்துவமே இந்த மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவுமிக்க இருதரப்பு உறவுகள் வலுப்பெற்றுள்ளதாக தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, எதிர்காலத்தில் இரு நாட்டு மக்களுக்கும் பரஸ்பர நன்மைகள் ஏற்படும் விதத்தில் அந்த உறவுகள் மேலும் விரிவுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.