இலங்கை மக்களை ஏமாற்றி வருவதாக ஜனாதிபதி அநுர மீது குற்றச்சாட்டு
இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தொடர்ந்தும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கிவருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இனை தெரிவித்துள்ளார்.
மஹரகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கையூட்டல் ஊழல் ஒழிக்கப்படும், எரிபொருள் விலை குறைக்கப்படும் என தற்போதைய ஜனாதிபதி சகல தேர்தல் மேடைகளிலும் கூறினார்.
எரிபொருள் விலையைக் குறைத்து மக்களுக்குச் சலுகைகளைத் தருவதாகக் கூறிய அவர் தற்போது மக்களை ஏமாற்றி வருகிறார்.
தற்போது மின்சார கட்டணத்தை 33 சதவீதம் குறைக்க உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றுமொரு வாக்குறுதியை வழங்கியுள்ளார்.
இதனை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை தேவையில்லை. எனினும், அவர் அதனை முன்னெடுக்காமல் அதனையும் பொய்யான வாக்குறுதியாக மாற்றி வருகிறார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இரண்டு தடவைகள் பேச்சுவார்த்தைகளை நடத்திய போதிலும், வரிகளைக் குறைப்பதற்கு அல்லது சலுகைகளை வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கத்தினால் முடியாது போயுள்ளது.
எனவே, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான மீளாய்வைக் கூட அவர்கள் பிற்போட்டுள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.