கரீபியன் கடற்பகுதிக்கு கொண்டுவரப்பட்ட அமெரிக்காவின் சக்திவாய்ந்த போர் கப்பல்!
உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டை (USS Gerald R Ford) மையமாகக் கொண்ட ஒரு அமெரிக்க கடற்படை தாக்குதல் கப்பல் கரீபியன் கடற்பரப்பிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அமெரிக்க கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த கப்பலில் 4,000 க்கும் மேற்பட்ட மாலுமிகள் மற்றும் டஜன் கணக்கான விமானங்கள் உள்ளன. தாக்குதல் படையில் வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பான்கள் மற்றும் பல்வேறு கப்பல்களும் இதில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில் போதைப்பொருள் கொண்டு செல்லும் கப்பல்களைத் குறிவைத்து தாக்குதவதற்காக இந்த கப்பல் வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் பகுதிகளில் மீது அமெரிக்கா இதுவரை முன்னெடுத்த 19இற்கும் மேற்பட்ட தாக்குதல்களில் 76 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ட்ரம்பின் இந்த நடவடிக்கை கரீபியன் கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு எதிரான பாரிய நடவடிக்கையாக கருதப்பட்டாலும் மறைமுகமாக ட்ரம்ப் அந்த பகுதியை தனது ஆளுகையின் கீழ் கொண்டுவர முயற்சிக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளதாக விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ ( Nicolas Maduro) மற்றும் பிற வெனிசுலா அதிகாரிகள், அமெரிக்கா ஒரு நெருக்கடியை உருவாக்கி நாட்டின் இடதுசாரி சோசலிச அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நடவடிக்கை கரீபியின் கடற்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





