சிங்கப்பூரில் ரயிலில் தீப்பிடித்த power bank – உயிர்தப்பிய 650 பயணிகள்

சிங்கப்பூரில் ரயில் பயணி ஒருவரின் power bank எனும் மின்னூட்டம் செய்யும் சாதனம் தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றுமுன்தினம் மாலை ரயில் Raffles Place நிலையத்தைச் சென்றடைந்ததும், ரயிலில் இருந்த அனைத்து 650 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
SMRT ரயில் நிலைய ஊழியர்கள் உடனடியாகத் தீயணைப்புக் கருவியைப் பயன்படுத்தித் தீயை அணைத்தனர். power bank சாதனத்தை வைத்திருந்த சென் என்பவருக்கு முதலுதவி வழங்கப்பட்டது.
அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. வேறு எவரும் காயமடையவில்லை என்று SMRT நிறுவனம் தெரிவித்தது.
தமது பையில் இருந்த power bank தீப்பற்றியதை உணர்ந்ததும் உடனடியாகப் பையைக் கீழே தூக்கி வீசியதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரயில் கதவுகள் திறந்ததும் அவர் மற்ற பயணிகளுடன் சேர்ந்து சீக்கிரமாக ரயிலைவிட்டு வெளியேறியதாகவும் தெரிவித்தார். ரயில் பின்னர் சாங்கி கிடங்கிற்கு அனுப்பப்பட்டது.
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை விசாரணை நடத்தியது. முதற்கட்ட விசாரணையில் சாதனத்தின் மின்னூட்டம் செய்யும் பகுதியில் தீ மூண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.