உத்தரபிரதேசத்தில் மாரடைப்பால் உயிரிழந்த அரசியல்வாதி முக்தார் அன்சாரி
பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிழல் உலக தாதாவும், முன்னாள் அரசியல்வாதியுமான60 வயதான முக்தார் அன்சாரிமாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து, மாநிலம் முழுதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த மரணம் விஷம் கொடுத்து, முக்தார் அன்சாரி கொல்லப்பட்டதாக அவரது மகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உத்தர பிரதேசத்தின் காஜிபூரை சேர்ந்தவர் முக்தார் அன்சாரி. ரவுடியாக வாழ்க்கையை துவங்கிய இவர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு, நிழல் உலக தாதாவாக உருவானார்.
உ.பி.,யின் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து, அரசியல் வாழ்க்கையை துவக்கிய இவர், ஐந்து முறை எம்.எல்.ஏ.,வாக பதவி வகித்தார்.
இவர் மீது, 80க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன. கடந்த 2005 முதல் சிறையில் உள்ள முக்தார் அன்சாரிக்கு, போலி துப்பாக்கி உரிமம் வைத்திருந்த வழக்கில் சமீபத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
உ.பி.,யின் பண்டா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. அவர் தொடர்ந்து வாந்தி எடுத்ததாகக் கூறப்படுகிறது.
சுயநினைவு இல்லாத நிலையில், பண்டாவில் உள்ள ராணி துர்காவதி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். டாக்டர்கள் குழு சிகிச்சை அளித்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதை தொடர்ந்து உ.பி., முழுதும் பதற்றம் ஏற்பட்டது. வன்முறை மற்றும் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக மாநிலம் முழுதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
பண்டா, மாவ், காஜிபூர், வாரணாசி உள்ளிட்ட மாவட்டங்களில் போலீசாருடன், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும் அன்சாரியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது உணவில் மெல்லக் கொல்லும் விஷம் கலக்கப்பட்டதாகவும், அவரது மகன் உமர் அன்சாரி மற்றும் சகோதரரும், காஜிபூர் எம்.பி.,யுமான அப்சல் அன்சாரி ஆகியோர் குற்றஞ்சாட்டினர்.
இது தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடக் கோரினர்.