இலங்கை: சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மூன்று வாகனங்களுடன் அரசியல்வாதி கைது!
சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனம் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31) பாணந்துறை பின்வத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மிட்சுபிஷி ஜீப்பை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் போலியான இலக்கத் தட்டில் பதிவு செய்வதற்கு அரசியல்வாதி போலி ஆவணங்களைப் பயன்படுத்தியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளின் போது இரத்மலானை பகுதியில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு லேண்ட் ரோவர் இயந்திரங்களை பொலிஸார் நேற்று கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேக நபர் மூன்று சொகுசு வாகனங்களுக்கு இலக்கத் தகடுகளைப் பெற்றுக் கொள்வதற்காக போலி ஆவணங்களைப் பயன்படுத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மூன்று வாகனங்களும் பின்வத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், வலான ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.