பொலிஸாரின் யுக்திய நடவடிக்கை : இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது!
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி முதல் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட நீதி நடவடிக்கையின் மூலம் நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 56,541 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 49,558 சந்தேக நபர்களில் 1,817 சந்தேகநபர்கள் தடுப்பு உத்தரவுகளின் அடிப்படையில் மேலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், மேலும் 1,981 போதைக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் 234 சந்தேகநபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதோடு, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 3,083 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட மொத்த போதைப்பொருளின் சந்தை மதிப்பு 7,733 மில்லியன் என்றும், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளின் சந்தை மதிப்பு 726 மில்லியன் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், குற்றப் பிரிவுக்குட்பட்ட 6,983 சந்தேக நபர்களில் கைது செய்யப்பட்டவர்களில் 1,117 சந்தேக நபர்கள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும், 5,286 போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் பெற்றுள்ளனர்.
262 காணாமல் போன சந்தேக நபர்களும் 318 தேடப்படும் சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.