இலங்கை இராணுவ அதிகாரியை கடுமையாக திட்டிய பொலிஸ்

கண்டியில் இடம்பெற்று வரும் ஶ்ரீ தலதா வழிபாட்டு நிகழ்வுப் பணியில் இருந்த இராணுவ உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திட்டுகின்ற வீடியோ ஒன்று தொடர்பில் பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் குறித்த வீடியோ காட்சியில் போக்குவரத்து கடமை சீருடையில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், இராணுவ உத்தியோகத்தர் ஒருவரை அங்கிருந்து செல்லுமாறு கடுமையான வார்த்தை பிரயோகம் செய்துள்ளார்.
இது தொடர்பில் பதில் பொலிஸ் மாஅதிபரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கண்டி மாவட்டம் 1 இற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த விசாரணைகளின் அடிப்படையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.