குடும்ப பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்
குடும்ப பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரி தொந்தரவு செய்த 58 வயதுடைய உப பொலிஸ் பரிசோதகரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆந் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதவான் த.கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை (22) அன்று கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் மாறுவேடத்தில் சென்று கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவினுள் உள்ள தனியார் விடுதியில் வைத்து குறித்த உப பொலிஸ் பரிசோதகரை குடும்ப பெண்ணுடன் அறையில் வைத்து கைது செய்திருந்தனர்.
இதன் போது ஏற்கனவே குற்றச்செயல் ஒன்றிற்காக நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்ட குடும்ப பெண் (33) நீதிமன்ற பிணை நிபந்தனையான மாதம் ஒருமுறை கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கையெழுத்து வைப்பதில் இருந்து தவிர்ப்பதற்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 59 வயதுடைய நீதிமன்ற உத்தியோகத்தரான உப பொலிஸ் பரிசோதகர் பாலியல் இலஞ்சம் கோரி தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இதனையடுத்து குறித்த குடும்ப பெண் உரிய தரப்பினரிடம் முறைப்பாடு வழங்கியதை தொடர்ந்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரின் வழிகாட்டலில் கல்முனை கடற்கரை பகுதியிலுள்ள உல்லாச விடுதி அறையில் மாறுவேடத்தில் சென்ற இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் குடும்ப பெண்ணுடன் அரை நிர்வாணமாக இருந்த நிலையில் உப பொலிஸ் பரிசோதகரை கைது செய்துள்ளனர்.
மேலும் குறித்த குடும்ப பெண்ணுடன் தொலைபேசி வாயிலாக 8 தடவைக்கு மேலாக தொடர்பு கொண்டு உப பொலிஸ் பரிசோதகர் பாலியல் இலஞ்சம் கோரியுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட விடுதி அறையில் இருந்து பாலியலை தூண்டும் மாத்திரைகள் ஆணுறை உள்ளிட்ட ஒரு தொகை பணமும் மீட்கப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும் குடும்ப பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரி தொந்தரவு செய்த 58 வயதுடைய உப பொலிஸ் பரிசோதகரை விசாரணையின் பின்னர் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதவான் த.கருணாகரன் முன்னிலையில் அன்றைய தினம் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆந் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
தொடர்ந்து 3 பிள்ளைகளின் தந்தையான அட்டாளைச்சேனை பகுதியை சேர்ந்த அப்துல் ஹை என்ற சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர் மட்டக்களப்பிலுள்ள சிறைச்சாலைக்கு இரவு அழைத்து செல்லப்பட்டு அங்கு தடுத்து வைத்த பின்னர் கொழும்பிற்கு இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் அழைத்துச் சென்றுள்ளனர்.இது தவிர நீண்ட காலமாக நீதிமன்ற கடமையில் இருக்கின்ற இச்சந்தேக நபருக்கு காலை வேளை பாலியலை தூண்டும் மாத்திரைகள் ஆணுறைகளை விநியோகித்தவர் யார் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் போன்ற ஏனைய பெண்களிடமும் இவ்வாறு பாலியல் இலஞ்சம் பெறப்பட்டுள்ளதா? என இலஞ்ச ஊழல் விசாரணை பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த குடும்ப பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரி கைதான உப பொலிஸ் பரிசோதகரை சிறைச்சாலை பேரூந்தில் வைத்து சக கைதிகள் தாக்கியுள்ளனர். குறித்த குற்றச்செயலை சுட்டி காட்டி குறித்த தாக்குதலை மேற்கொண்டதன் காரணமாக அவரை அவ்விடத்தில் இருந்து பாதுகாப்பாக அகற்றி சிறைச்சாலை அதிகாரிகளின் உதவியுடன் கொழும்பிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.