யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தர் துஷ்பிரயோகம்
யாழ்ப்பாணத்தில் ஆண் பொலிஸ் உத்தியோகஸ்தரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த பொறுப்பதிகாரி தொடர்ந்தும் தன்னை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதால், மனவுளைச்சலுக்கு உள்ளாகி பொலிஸ் வேலையில் இருந்து விலகுவதாக உயர் அதிகாரிகளிடம் கடிதம் கையளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றின் பொறுப்பதிகாரி, அந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சிலருடன் மாதகல் கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு, பொறுப்பதிகாரிக்கு தெரிந்த வெளிநபர்கள் சிலரும் வந்திருந்தனர். அவர்களுடன் இணைந்து மது அருந்திய பின்னர் கடலில் குளித்த போது, பொறுப்பதிகாரி, தன்னுடன் அழைத்து சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதனை அவர் தடுத்து எச்சரித்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, பொலிஸ் நிலையம் வரும் வழியில், விடுதி ஒன்றுக்கு பொலிஸ் உத்தியோகஸ்தரை அழைத்து சென்று, அங்குள்ள அறை ஒன்றிற்குள் பூட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
அதனால், பொலிஸ் உத்தியோகஸ்தர் பொறுப்பதிகாரியை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி பொலிஸ் நிலையம் சென்றிருந்தார்.
பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பதிவேட்டு புத்தகத்தில் குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையாக எழுதியுள்ளார்.
தொடர்ந்து பொலிஸ் உயர் அதிகாரிகளிடமும் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஆனால் சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகள் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், குறித்த சம்பவத்தின் பின்னர் பொறுப்பதிகாரி தன்னை பழிவாங்கும் வகையில் தொடர்ந்து செயற்படுவதனால் மனவுளைச்சலுக்கு உள்ளாகி உள்ளதால், பொலிஸ் சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் தெரிவித்துள்ளார்