இலங்கையில் e-Traffic செயலியை அறிமுகப்படுத்திய பொலிஸ்!
இலங்கையில் கிளீன் ஸ்ரீலங்கா – 2025 திட்டத்திற்கு அமைய போக்குவரத்து முறைகேடுகள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்கள் தொடர்பில் பொதுமக்கள் துரிதமாக புகாரளிக்க ஈ- டிராபிக் (e-Traffic) என்னும் கையடக்கத் தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் புதன்கிழமை (1) பொலிஸ் தலைமையகத்தில் வைத்து, ஈ-டிராபிக் (e-Traffic) கையடக்கத் தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
கிளீன் ஸ்ரீலங்கா – 2025 திட்டத்திற்கு அமைய தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய செயலியை இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.police.lk ஊடாக E-சேவைகளைப் பார்வையிடுவதன் மூலம் e-Traffic கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டை உங்கள் கையடக்கத் தொலைபேசியில் இலகுவாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். மேற்படி செயலியின் மூலம் போக்குவரத்து முறைகேடுகள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்கள் தொடர்பில் பொதுமக்கள் துரிதமாக பொலிஸ் தலைமையகத்துக்குப் புகாரளிக்க முடியும்.
மேலும் இத்திட்டத்துக்கமைய நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் 607 பொலிஸ் நிலையங்களில் விசேட போக்குவரத்து அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். e-Traffic கையடக்க தொலைபேசி செயலியை அறிமுகப்படுத்துவதன் மூலம் தினசரி இடம்பெறும் வாகன விபத்துக்களை கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் இதற்கு தமது ஆதரவை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது. e-Traffic செயலியின் மூலம் காணோளிகளை பதிவேற்றுவதுற்கான வசதிகளும் காணப்படுகின்றது.
ஆகையால் பொதுமக்கள் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் அதனை ஒத்த பிற சம்பவங்களுடன் தொடர்புடைய புகைப்படங்கள், காணொளிகளை இக்கணக்கை பயன்படுத்தி பொலிஸ் தலைமையகத்துக்க வழங்க முடியும். அவ்வாறு மக்களால் வழங்கப்படும் தகவல்களின் அடிப்படையில், போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் மற்றும் பிற சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசாரணை மேற்கொண்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குறித்த தகவலை சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் பிரிவுகளுக்கும் வழங்கும். அத்தோடு அவை தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் தலைமையகத்தின் மேற்பார்வையின் கீழ் இடம்பெறும் என்றார்.