தமிழர் பகுதியில் காணியை அபகரிக்கும் பொலிஸாரின் முயற்சி; நாடாளுமன்றில் சூடுப்பிடித்த விவகாரம்

தமிழர் பகுதியில் காணியை அபகரிக்கும் பொலிஸாரின் முயற்சி; நாடாளுமன்றில் சூடுப்பிடித்த விவகாரம்
ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள சுமார் அரை ஏக்கர் தனியார் காணியை பொலிஸார் கையகப்படுத்த முயற்சிப்பது குறித்த முறைபாபாடொன்று காணி உரிமையாளரினால் வவுனியா பிரதேச செயலாளரிடம் வழங்கப்பட்டது.
ஜூலை 7ஆம் திகதி, வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன், பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியை கையகப்படுத்தி மேம்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.
ஜனநாயக்க தமிழ் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கேள்விகளுக்கு முகங்கொடுத்த நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டு முக்கிய அமைச்சர்கள் ஜூலை 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் காணியை கையகப்படுத்தும் முயற்சியை நிறுத்துமாறு பொலிஸாரிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டனர்.
காணியை அபகரிக்க பொலிஸார் மேற்கொண்ட முயற்சி குறித்து சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, கூட்டுறவு அமைச்சர் உபாலி சமரசிங்கவால் ‘தனியார் காணியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் சுத்தப்படுத்தும் பணியை’ மேற்கொள்ள வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
காணி கையகப்படுத்துதலை நிறுத்த பொலிஸார் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவும் தெரிவித்தார்.
“வவுனியாவில் உள்ள ஓமந்தை பொலிஸ் நிலையத்தைச் சுற்றியுள்ள காணியை, பொலிஸார் துப்பரவாக்குவதாக தான் நினைப்பதாக, அந்த பிரதேசத்தைச் சேர்ந்த எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களுக்குத் தெரிவித்தனர். இது குறித்து இன்று ஐஜிபியிடம் தெரிவித்தேன். அது நிறுத்தப்பட்டது. இதுவரை எந்தப் பிரச்சினையும் இல்லை. அதன் சட்டரீதியிலான நிலைமையின் கீழ் நீங்கள் மேலும் நடவடிக்கை எடுக்கலாம். அது தனியார் காணியாக இருந்தால், அதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதை கையகப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.”
முப்படைகள், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரச் சபை, தொல்லியல் திணைக்களம் மற்றும் வன பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவை வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.