இந்தோனீசியாவில் இணைய சூதாட்டத்திற்காக கைக்குழந்தையை விற்ற தந்தை- கைது செய்த பொலிஸார் !!
இந்தோனீசியாவின் மேற்கு ஜகார்த்தாவில் உள்ள தங்கெராங் பகுதியில், 15 மில்லியன் ரூப்பியாவுக்கு ($955 அமெரிக்க டொலர்) இணையத்தில் தனது 11 மாதக் கைக்குழந்தையை விற்ற சந்தேகத்தின்பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘ஆர்ஏ’ என்று அடையாளம் காணப்பட்ட அந்த 36 வயது நபர், கிடைத்த பணத்தை இணையச் சூதாட்டத்துக்கும் தனிப்பட்ட தேவைகளுக்கும் பயன்படுத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
ஆள்கடத்தல் கட்டமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டதால், குழந்தையை வாங்கியவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அந்தச் சம்பவம் முதன் முறையாக அக்டோபர் 1ஆம் திகதி வெளிச்சத்துக்கு வந்தது. கலிமாந்தானில் வேலைசெய்து திரும்பியபோது, குழந்தையின் தாயாரால் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
கணவரிடம் குழந்தையைப் பற்றிக் கேட்டபோது, அவர் இறுதியில் குழந்தையை விற்றுவிட்டதாகக் கூறியதாய் தங்கெராங் சிட்டி மெட்ரோ காவல்துறைத் தலைவர் ஸேன் டுவி நுகுரோஹொ கூறினார்.
காவல்துறை விசாரித்தபோது, நிதிச் சுமையைக் குறைப்பதற்காக குழந்தையை விற்றதாக ‘ஆர்ஏ’ கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர் அந்தப் பணத்தை இணையச் சூதாட்டத்திற்குப் பயன்படுத்தியதாக காவல்துறை கூறியது.
இந்நிலையில், இந்தோனீசியக் குழந்தைப் பாதுகாப்பு ஆணையம் அந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.