போலந்தின் ரயில் பாதை தகர்ப்பு – ரஷ்யா மீது குற்றச்சாட்டு!
போலந்தில் ரயில் பாதையை வெடிக்கச் செய்ய ரஷ்ய ரகசிய சேவைகள் உத்தரவிட்டதாக சில ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஏபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தகவலை போலந்தின் பாதுகாப்பு சேவைகள் அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் ஜேசெக் டோப்ர்சின்ஸ்கி (Jacek Dobrzyński) இன்று தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் போலந்தின் கிழக்கு பகுதியில் உள்ள ரயில்வே மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பை சரிபார்க்க இராணுவ ரோந்துப் படையினர் அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே போலந்தின் பிரதமர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk) இந்த சம்பவத்தை முன்னோடியில்லாத நாசவேலைச் செயல்” என்று விவரித்துள்ளார்.
போலந்தின் தலைநகரான வார்சாவை உக்ரைன் எல்லையுடன் இணைக்கும் ரயில் பாதையே இவ்வாறு வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.
அந்த ரயில் பாதை உக்ரைனுக்கு உதவிகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகிறது என்று போலந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்கு ரஷ்யா காரணமாக இருக்கலாம் என முன்பு சந்தேகிக்கப்பட்டிருந்த நிலையில் சில ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.




