உக்ரைனுக்கு இனி எந்த உதவியும் வழங்கப்போவதில்லை என அறிவித்துள்ள போலந்து
தானிய இறக்குமதி தொடர்பில் ஏற்பட்ட கருத்து மோதல், தற்போது உக்ரைனுக்கு இனி ஆயுத உதவிகள் எதுவும் செய்வதாக இல்லை என்ற முடிவுக்கு போலந்து நாட்டை தள்ளியுள்ளது.
இனி தங்களுக்கான நவீன ஆயுதங்களை உருவாக்க தனி கவனம் செலுத்த இருப்பதாகவும் போலந்து பிரதமர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ள கருத்துகள் ஏற்படுடையதாக இல்லை என குறிப்பிட்டு, செவ்வாய்க்கிழமை தங்கள் நாட்டுக்கான உக்ரைன் தூதரை அழைத்து போலந்து கடிந்து கொண்டது.
ஜெலென்ஸ்கி தெரிவிக்கையில், சில நாடுகள் உக்ரைனை ஆதரிக்க பயப்படுகிறது என்றார். ஆனால் ரஷ்யா போர் தொடுத்த முதல் நாளில் இருந்தே போலந்து உக்ரைனுக்கு ஆதரவளித்து வருகிறது.இந்த நிலையில் தான், புதன்கிழமை நாட்டு மக்களுக்கு அளித்த செய்தியில், இனி உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை முன்னெடுக்க போலந்து தயாராக இல்லை என பிரதமர் Mateusz Morawiecki அறிவித்துள்ளார்.
போலந்து பிரதமரின் இந்த முடிவுக்கு காரணம் உக்ரைனின் தானிய இறக்குமதியால் ஏற்பட்ட சிக்கல் என்றே கூறப்படுகிறது. கருங்கடல் கப்பல் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ள நிலையில், உக்ரைனின் தானியங்களின் பெரும்பகுதி மத்திய ஐரோப்பாவில் குவிந்துள்ளது.இதன் விளைவாக, உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாக்கும் பொருட்டு பல்கேரியா, ஹங்கேரி, போலந்து, ருமேனியா மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய ஐந்து நாடுகளுக்கு தானிய இறக்குமதியை தற்காலிகமாக தடை செய்தது ஐரோப்பிய ஒன்றியம்.
உக்ரைன் தானிய வரவால், உள்ளூர் சந்தை கடுமையாக பாதிக்கப்படும் என்ற அச்சமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதனிடையே, செப்டம்பர் 15ம் திகதி இந்த தற்காலிகத் தடை முடிவுக்கு வந்தது.ஆனால் ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் போலந்து நாடுகள் தானிய இறக்குமதி தடையை தொடர்ந்து செயல்படுத்த முடிவு செய்தன. தொடர்ந்து இந்த நாடுகளுக்கு எதிராக உக்ரைன் வழக்கு தொடுக்க முடிவெடுத்தது. இதுவே, தற்போது உக்ரைனுக்கு எதிராக போலந்து நாட்டை முடிவெடுக்க வைத்துள்ளது