இஸ்ரேல் ஜனாதிபதி ஆஸ்திரேலியாவுக்கு விஜயம்
அண்மைய பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் அரசியல் விமர்சனங்களால் இரு நாடுகளுக்கும் இடையே முறுகல் நிலை நீடித்து வந்த சூழலில், இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் ( Isaac Herzog) விரைவில் ஆஸ்திரேலியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி விடுத்த அழைப்பினை ஏற்று இந்த விஜயம் அமையவுள்ளது.
சிட்னியின் போண்டி பகுதியில் யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, ஆஸ்திரேலிய அரசாங்கத்தை இஸ்ரேல் கடுமையாக விமர்சித்திருந்தது.
குறிப்பாக, பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் ஆஸ்திரேலியாவின் முடிவைச் சாடிய இஸ்ரேல் பிரதமர், அந்தோனி அல்பானீஸியை ஒரு பலவீனமான தலைவர் என்றும் விமர்சித்திருந்தார்.
இந்த இராஜதந்திரப் பதற்றங்களுக்கு மத்தியில், நேற்று இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே தொலைபேசி வாயிலாக சுமூகமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
ஆஸ்திரேலிய ஆளுநர் நாயகம் மூலம் இதற்கான உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்படும் எனவும், அதனை ஏற்று தான் விரைவில் ஆஸ்திரேலியா வருவேன் என்றும் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் உறுதிப்படுத்தியுள்ளார்.





