ஐக்கிய தேசியக் கட்சியை கட்டியெழுப்ப ஆயிரம் கூட்டங்களை நடத்த திட்டம்!
ஐக்கிய தேசியக் கட்சி கட்டியெழுப்படும் எனவும், ஆயிரம் கூட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது எனவும் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அணிதிரட்டலுக்கான பிரதிச் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள ஹரின் பெர்ணான்டோ இன்று (10) தமது கடமையை பொறுப்பேற்றார்.
ஐதேக தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற இதற்குரிய நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“ஐக்கிய தேசியக் கட்சியையும், ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிக்கு முழு ஆதரவு வழங்கப்படும். இரு தரப்பும் இணைய வேண்டுமென கிராம மட்டத்திலான மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். எனவே, அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்பார்கள் என நம்புகின்றோம்.
அவ்வாறு இல்லையேல் அன்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கியதுபோல, ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் வருவதை தடுக்க முடியாது.”எனவும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் ஆயிரம் கூட்டங்களை நடத்துவதற்குரிய பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய வழியில் எமது கட்சியின் அரசியல் பயணம் தொடரும்.” எனவும் அவர் கூறினார்.




