தென் கொரியாவை உலுக்கிய விமான விபத்து – விபத்துக்கு முன் உதவி கேட்ட விமானி
தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் விபத்து ஏற்படுவதற்கு முன் விமானி உதவி கேட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Jeju Air விமானம் தரையிறங்கியபோது அது ஓடுபாதையிலிருந்து விலகி, சுவர் மீது மோதிக்கொண்டது. அது பின்னர் தீப்பற்றிக் கொண்டது.
ஆக அண்மை நிலவரப்படி 177 பேர் மாண்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். விமானத்தில் 175 பயணிகளும் 6 விமான ஊழியர்களும் இருந்தனர்.
மிக இளையவரின் வயது 3ஆகும். மிக வயதான நபரின் வயது 78 என தெரியவந்துள்ளது. பயணிகள் பெரும்பாலும் தென் கொரியர்கள். இருவர் தாய்லந்தைச் சேர்ந்தவர்களாகும்.
இதுவரை விமான ஊழியர்கள் இருவர் உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பெண்; இன்னொருவர் ஆண் என தெரியவந்துள்ளது.
விமானம் மீது பறவைகள் மோதியதால் அது விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. விமானம் மீது பறவைகள் மோதக்கூடும் என்று விமான நிலையக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் முன்கூட்டியே விமானியிடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
அதன் பிறகு சிறிது நேரத்தில் விமானி உதவி கேட்டு அழைப்பு விடுத்தார். இரண்டு நிமிடங்களுக்குள் விபத்து நேர்ந்ததாக அதிகாரிகள் கூறினர்.