முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை அமுல்படுத்த திட்டம்!
முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை மீண்டும் அமுல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு சில முட்டை உற்பத்தியாளர்கள் செயற்கையாக முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுத்த முயற்சிப்பதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த நிலைமையை சமாளிக்கும் வகையில், உள்ளூர் சந்தையில் முட்டையின் கிடைக்கும் தன்மையை அதிகரிக்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அத்துடன் வருடா வருடம் முட்டை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க, ஒரு முட்டை விற்கப்பட வேண்டிய அதிகபட்ச சில்லறை விலையை முன்வைக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். விலை அடுத்த வாரம் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு சமர்ப்பிக்கப்படும்.
ஒரு முட்டை உற்பத்திக்கான செலவு 30 ரூபாவாகும், ஆனால் சந்தையில் உள்ளூர் முட்டை ஒன்றின் விலை 60 ரூபாவாக அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.