அமெரிக்காவில் விமான பயணிகளைப் பதறவைத்த விமானி

அமெரிக்காவில் ஒரு பயண விமானம் எதிர்பாராத விதமாகச் சம்பவமொன்றில் சிக்கியதால், பயணிகள் பெரும் பதற்றத்தில் ஆழ்த்தப்பட்டனர்.
ஜூலை 18ஆம் திகதி இடம்பெற்ற இந்த நிகழ்வை ஸ்கை வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மின்னெசோட்டாவின் மின்னியெப்போலிஸ் – செயிண்ட் பால் நகரத்திலிருந்து வட டகோட்டா மாநிலத்தில் உள்ள மினோட் அனைத்துலக விமான நிலையம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த விமானம், திடீரென ஒரு ராணுவ விமானம் மிக அருகில் பறந்ததை விமானி கவனித்தார்.
அந்த ராணுவ விமானம் எதிர்பாராத விதமாக வலது புறமாக மிக நெருக்கமாக வந்ததால், விமானி தாக்கத்தைத் தவிர்க்க வேகமாக விமான திசையை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த விபத்து தடுக்கப்பட்ட நிலையில், பயணிகள் கடும் பயத்தில் உறைந்தனர்.
சம்பவத்தின் வீடியோ TikTok தளத்தில் பகிரப்பட்டு பரவலாகப் பரவி வருகிறது. அதில் விமானி, இந்த அபாய நிலை எப்படி ஏற்பட்டது என்பது குறித்து பயணிகளுக்கு நேரடியாக விளக்கம் அளிக்கிறார்.
அதில், “ராணுவ விமானம் அருகில் இருப்பதை விமானக் கட்டுப்பாட்டு நிலையம் முன்பதாக தெரிவிக்கவில்லை” என்று விமானி குற்றம்சாட்டுகிறார். அதனாலேயே, அதை பார்த்தவுடன் விமானத்தை வேகமாகத் திருப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
இந்த திடீர் நடவடிக்கையால் பயணிகள் பெரும் பதற்றத்துடன் இருக்கும்போதும், ஒரு பயணி விமானியின் செயல்முறையை பாராட்டியுள்ளார். “சம்பவத்திற்கு மன்னிக்கவும்; நீங்கள் நிதானமாகச் செயல்பட்டீர்கள்” என்றார் அவர்.
இந்த நிகழ்வு, விமானப் பாதுகாப்பு மற்றும் விமானக் கட்டுப்பாட்டு மையங்களின் தகவல் பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது.