பிள்ளையானை 90 நாட்கள் தடுப்புக்காவலில் விசாரணை நடத்த அனுமதி!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தனை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைப்பதற்கான உத்தரவிடப்பட்டுள்ளது.
பிள்ளையான் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளது.
சிவனேசதுரை சந்திரகாந்தனை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்திருந்தனர்.
2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பயணித்த நிலையில், அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் பிள்ளையான் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், குற்றப் புலனாய்வு திணைக்களம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சிவனேசதுரை சந்திரகாந்தனை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைப்பதற்கான உத்தரவைப் பெற்றுள்ளது.