சமூக ஊடகங்களில் வைரலாகும் மஹிந்த மகனின் புகைப்படம் – பொலிஸார் விளக்கம்
கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட யோஷித ராஜபக்ஷவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகைப்படம் குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ அல்லது ஒரு பொலிஸ் அதிகாரியினாலோ எடுக்கப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இதனை குறிப்பிட்டுள்ளார்.
அது பெலியத்த அதிவேக நெடுஞ்சாலை சோதனைச் சாவடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம். அதை யோஷித ராஜபக்ஷவின் நண்பர் அல்லது வேறு நபரொருவர் எடுத்திருக்கலாம்.
கைது செய்யப்படும் ஒவ்வொரு சந்தேக நபருக்கும் கைவிலங்கு போட வேண்டிய அவசியமில்லை. சந்தேக நபரின் நடத்தையைப் பொறுத்து, அந்த நேரத்தில் பணியில் இருக்கும் பொலிஸ் அதிகாரியே சந்தேக நபருக்கு கைவிலங்கு போடலாமா வேண்டாமா என்பதை என்பதை தீர்மானிப்பார்.
அதன்படி, பொலிஸ் அதிகாரிகள் உரிய நேரத்தில் சரியான சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். எந்த விதத்திலும் அரசியல் அதிகாரத்தின் தலையீடு இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷ, நேற்று முன்தினம் காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் கைது செய்யப்பட்டார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை சேர்ந்த அதிகாரிகள் குழுவால் அவர் கைது செய்யப்பட்டார்.
இரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக யோஷித ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றிருந்தது.