தேர்தல் பின்னடைவுக்குப் பிறகு, மொத்த அமைச்சரவையும் பதவி விலக பிலிப்பீன்ஸ் அதிபர் மார்கோஸ் உத்தரவு

பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டிணன்ட் மார்கோஸ் ஜூனியர் ஒட்டுமொத்த அமைச்சரவையையும் பதவி விலகும்படி உத்தரவிட்டுள்ளார்.
கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு முன் நடைபெற்ற இடைத்தேர்தலில் சாதகமான முடிவுகள் வராததை அடுத்து மார்கோஸின் பிடி தளர்ந்துள்ளதாக நிபுணர்கள் குறிப்பிட்டனர்.
“மக்கள் பேசியுள்ளனர். அவர்கள் தீர்வுகளை எதிர்பார்க்கிறார்கள். அரசியலையோ சாக்குகளையோ அல்ல,” என்று மே 22ஆம் திகதி அறிக்கை வெளியிட்டார் மார்கோஸ்.
அதிபர் மார்கோஸ் அங்கீகரித்த செனட் வேட்பாளர்கள் படுதோல்வியைச் சந்தித்தனர். எதிர்தரப்பான துணையதிபர் சாரா டுட்டார்ட்டேவுடன் கைகோத்தோரும் சுயேட்சை வேட்பாளர்களும் ஆச்சரியமான வகையில் கூடுதல் வாக்குகள் பெற்றனர்.
இடைத்தேர்தல் முடிவுகள் வலுவிழந்த மார்கோஸின் அதிகாரம் குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளது. அவரின் தவணைக் காலம் 2028ஆம் ஆண்டு முடிவடையும்.
துணையதிபர் சாரா டுட்டார்ட்டேக்கு எதிரான அரசியல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையில் செனட் சபை உறுப்பினர்கள் நீதிபதிகளாக விரைவில் பொறுப்பு வகிக்கவிருப்பதாலும் இடைத்தேர்தல் முடிவுகள் மிகவும் முக்கியமாகக் கருதப்பட்டன.
அரசாங்க நிதியைத் தவறாகப் பயன்படுத்தியது, அதிபர், அவரது மனைவி, மார்கோஸின் உறவினரும் நாடாளுமன்ற நாயகருமான மார்டின் ரோமால்டஸ் ஆகியோரைக் கொலை செய்யப்போவதாக மிரட்டியது ஆகியவற்றுக்காகத் துணையதிபர் சாரா டுடார்ட்டேவைப் பதவியிலிருந்து நீக்க மார்கோஸ் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த பிப்ரவரி மாதம் முயன்றனர்.
சாரா டுடார்ட்டேவின் விசாரணை முதலில் ஜூலை மாதம் தொடங்கவிருந்த நிலையில் செனட் தலைவர் ஃபிரான்சிஸ் அதை ஜூன் 3ஆம் திகதிக்குக் கொண்டுவந்தார்.
துணையதிபர் சாரா டுடார்ட்டேயின் தந்தையும் முன்னாள் அதிபருமான ரொட்ரிகோ டுட்டார்டேயை மார்ச் 11ஆம் திகதி மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்களுக்காக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் அவரை கைதுசெய்தது.அதையடுத்து அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது துணையதிபர் சாரா டுடார்ட்டேவின் கை ஓங்கியது.