2ஆம் கட்ட சண்டைநிறுத்தம்: இஸ்ரேல்-ஹமாஸ் பேச்சுவார்த்தையை நடத்த கட்டார் பிரதமர் வலியுறுத்தல்
இஸ்ரேலும் ஹமாஸும் உடனடியாக அடுத்தக்கட்ட காஸா சண்டை நிறுத்தப் பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு கத்தார் பிரதமர் கேட்டுக்கொண்டு உள்ளார்.இருப்பினும், அந்த இரண்டாம் கட்ட போர்நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை எப்போது தொடங்கும் என்று தெளிவாகத் தெரியவில்லை.
இந்நிலையில், கத்தார் தலைநகர் தோஹாவில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) பிரதமர் ஷேக் முஹம்மது அப்துல் ரஹ்மான் அல் தானி செய்தியாளர்களிடம் பேசினார். துருக்கியின் வெளியுறவு அமைச்சரும் அப்போது அங்கு இருந்தார்.
“போர்நிறுத்த உடன்பாட்டில் குறிப்பிட்டுள்ளபடி அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அவர்களை (ஹமாஸ், இஸ்ரேல்) கேட்டுக்கொண்டு உள்ளோம்,” என்றார் அல் தானி.
முதற்கட்ட சண்டைநிறுத்தம் நடப்புக்கு வந்த 16ஆம் நாளில் இரண்டாம் கட்ட சண்டைநிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைத் தொடங்கப்பட வேண்டும் என இஸ்ரேலுக்கும் ஹமாஸ் குழுவினருக்கும் இடையில் கையெழுத்தான மூன்றுகட்ட சண்டைநிறுத்த உடன்பாடு தெரிவிக்கிறது.
அந்த 16ஆம் நாள் திங்கட்கிழமை (பிப்ரவரி 3) என்பதால் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை இருதரப்பினரும் தொடங்கவேண்டிய நிலை உள்ளது.
முதற்கட்ட சண்டைநிறுத்தம் நடப்பில் உள்ள நிலையில் ஹமாஸ் குழுவினர் இஸ்ரேலின் 18 பிணைக்கைதிகளை விடுவித்துள்ளனர். அதற்குப் பரிமாற்றமாக நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவித்து உள்ளது.
காஸாவில் இன்னும் 70 பிணைக்கைதிகள் உள்ளனர்.
இரண்டாம்கட்ட உடன்பாடு, எஞ்சியுள்ள எல்லா பிணைக்கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.