மன்னாரில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் கைது
மன்னார் உயிலங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயிலங்குளம் பிரதான சந்தி பகுதியில் தீர்வை வரி செலுத்தாமல் நாட்டுக்கு சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி வெளிநாட்டு சிகரெட் பெட்டிகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்பிட்டி பகுதியில் இருந்து மன்னார் நகரில் உள்ள இரவு உணவகங்களுக்கு தீர்வை வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை விற்பனைக்கு கொழும்பு -மன்னார் பேரூந்தில் கடத்தி வந்த நிலையில் உயிலங்குளம் பகுதியில் குறித்த நபரை மன்னார் மாவட்ட குற்றப் தடுப்பிரிவனரால் கைது செய்துள்ளனர்.
மன்னார் பொலிஸ் குற்ற புலனாய்வு பிரிவினருக்கு நேற்றைய தினம் (19) கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் L.Y.A.S சந்திரபாலவின் பணிப்புரைக்கு அமைவாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானகே ஆலோசனையின் பெயரில் 9 பேர் அடங்கிய குழுவினரின் சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட நபர் சன்னார் பகுதியை சேர்ந்த 25 வயதான நபர் என்பதுடன் சந்தேக நபரிடம் மன்னார் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சான்று பொருள் மற்றும் சந்தேக நபரை ஆஜர்படுத்த உள்ளனர்.
சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து 2900 எண்ணிக்கை உடைய சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் தற்போதைய சந்தை மதிப்பு 5 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.