உலகில் இதுவரை காணாத அளவில் பசியால் வாடும் மக்கள்!
உலகில் 250 மில்லியனுக்கும் அதிகமானோர் கடந்த ஆண்டு கடுமையான பசியால் வாடுவதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.
அறிக்கையின் ஏழு ஆண்டு வரலாற்றில் இவ்வளவு பெரிய எண்ணிக்கை இதற்குமுன்னர் பதிவானதில்லை. உலக உணவுப் பாதுகாப்பு முயற்சிகளுக்கு இது ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
உலகில் இத்தனை பேர் பசியால் வாடுவதையும் பட்டினிக் கொடுமையை அனுபவிப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் கூறினார்.
மேம்பட்ட ஊட்டச்சத்து, உணவுப் பாதுகாப்பு முயற்சிகளில் மனிதகுலத்தின் தோல்வியை இது காட்டுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பசியால் வாடும் மக்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் ஆப்பிரிக்க நாடுகளிலும் மத்திய கிழக்கிலும் வாழ்கின்றனர். பூசல்கள், கடுமையான வானிலை ஆகியவை இந்த நிலைக்கு இட்டுச்சென்றுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
வரலாறு காணாத அனல்காற்று, வறட்சி, வெள்ளம் போன்றவை கடந்த சில ஆண்டுகளில் வாடிக்கையாகிவிட்டன. உணவு உற்பத்தியை இவை பாதிக்கின்றன.
பொருளாதார பாதிப்புகளும் உலக உணவு நெருக்கடிக்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.
கொரோனாப்பரவல், உக்ரேனியப் போர் முதலியவை வசதி குறைந்த நாடுகளின் மீது அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.