இலங்கையில் கடவுச்சீட்டு நெருக்கடி : புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
இலங்கையில் தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் 750,000 கடவுச்சீட்டுக்களுக்கு மேலதிகமாக, புதிய கடவுச்சீட்டுக்களுக்கான கட்டளைகள் இன்னும் வழங்கப்படாத நிலையில், இந்த நெருக்கடி தொழிலாளர் இடம்பெயர்வை முடக்கும் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரித்துள்ளது.
கொரிய மொழி புலமைத் தேர்வில் பங்கேற்க விரும்பும் வேட்பாளர்கள், தேர்வில் தேர்ச்சி பெற கடவுச்சீட்டு எண்களை வழங்க வேண்டும் என்பதால், எதிர்வரும் வாரங்களில் கடவுச்சீட்டுக்களுக்கான விண்ணப்பங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வகை புலம்பெயர்ந்தோரின் தேவையை பூர்த்தி செய்ய சுமார் 30,000 பயண ஆவணங்கள் வழக்கமாக தேவைப்படுகின்றன.
இலங்கை தொழிலாளர்களுக்கான கோரிக்கைகளை மீண்டும் நிறைவேற்றத் தவறினால், விரைவில் இலங்கை தொழிலாளர்களுக்கான வாய்ப்புக்கள் ஏனைய நாடுகளை நோக்கி திரும்பும் என்றும் பணியகம் எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டு பதிவுசெய்யப்பட்ட 312,000 புலம்பெயர்ந்தோரை விட இந்த ஆண்டு சுமார் 340,000 தொழிலாளர்களை அனுப்புவதே தமது இலக்காகும் என்றும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.