ஏர் இந்தியா விமானத்திற்குள் ஐந்து மணி நேரம் சிக்கிக்கொண்ட பயணிகள்
துபாய் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், ஐந்து மணி நேரத்திற்கு மேலாகியும் மும்பையிலிருந்து புறப்படாததால் அதனுள் அமர்ந்திருந்த பயணிகள் எரிச்சல் அடைந்தனர்.
மும்பை சத்ரபதி சிவாஜி அனைத்துலக விமான நிலையத்தில், குடியரசு தினத்திற்கு முதல் நாளான சனிக்கிழமை (ஜனவரி 25) அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
அங்கிருந்து காலை 8.25 மணிக்கு துபாய் நோக்கி அந்த AI 909 விமானம் புறப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. பயணிகள் அனைவரும் விமானத்திற்குள் வந்து அமர்ந்துவிட்டனர்.ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்கு விமானம் புறப்படவில்லை. தாமதம் ஆகிக்கொண்டே இருந்தது. இறுதியாக, ஐந்து மணி நேரமாக விமானத்திற்குள் அமர்ந்து இருந்த பயணிகள் கூச்சல் போடத் தொடங்கினர்.
விமானம் எப்போது புறப்படும் என்ற தகவலை விமானப் பணியாளர்கள் யாரும் தெரிவிக்கவில்லை என்றனர்.நிலவரத்தைக் காணொளியாகப் பதிவு செய்த பயணி ஒருவர், அதனை இன்ஸ்டகிராமில் பதிவேற்றினார்.
விமானத்திற்குள் பயணிகள் தவிப்பதையும் ‘கதவைத் திறந்து விடுங்கள் வெளியே செல்கிறோம்’ என்று உரக்கக் கத்திக்கொண்டே விமானத்தின் மேல் பகுதியை அவர்களில் ஒருவர் பலமாகத் தட்டுவதும் காணொளியில் பதிவாகி உள்ளது. ‘உங்களை நம்பத் தயாராக இல்லை’ என்று அவர் மீண்டும் கூச்சல் போட்டார்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் புறப்படத் தாமதம் ஆனதாகச் சொல்லப்பட்டது.‘விமானம் புறப்படுவதற்கான தொடர்புக்காகக் காத்திருக்கிறோம், புரிந்துகொள்ளுங்கள்’ என்று விமானி கூறுவது அந்தக் காணொளியில் பதிவாகி உள்ளது.
நேரம் செல்லச் செல்ல விமானத்திற்குள் பயணிகளின் போராட்டம் தீவிரமடைந்தது. வேறு வழியின்றி, பிற்பகல் 1 மணியளவில் விமான ஊழியர்கள் விமானத்தின் கதவைத் திறந்து பயணிகளை வெளியே விட்டனர்.பின்னர், மாலை 4.32 மணிக்கு அந்த விமானம் மும்பையிலிருந்து புறப்பட்டதை விமானக் கண்காணிப்புக் கருவி காட்டியது.
அது ‘கொடுமையான சம்பவம்’ என்று சமூக ஊடகத்தில் விமர்சித்த பயணி ஒருவர், விமானத்திற்குள் குளிரூட்டி சரியாக இயங்காததால் மூச்சு முட்டும் நிலை ஏற்பட்டதாகக் கூறினார்.