ரஷ்யா-உக்ரைன் போரில் பங்கேற்பது நியாயமானது ; வட கொரியத் தலைவர் கிம்

ரஷ்யா, உக்ரேன் இடையே நடந்துவரும் போரில் வடகொரிய ஈடுபாடு நியாயமானது என வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் கூறியதாக அந்நாட்டு அரசு ஊடகம் சனிக்கிழமையன்று (மே 10) செய்தி வெளியிட்டது.மேலும், சகோதர நாடு ஒன்றைக் காக்கும் முயற்சி வடகொரியாவின் சுய அதிகார உரிமைக்கு உட்பட்டது என அவர் கூறியதாக அது தெரிவித்தது.
ரஷ்யாவுடன் இணைந்து அப்போரில் பங்கேற்றது, தங்கள் குடியரசின் சுய அதிகார உரிமைகளுக்குள் அடங்கும் என்றும் ரஷ்யப் படையுடன் இணைந்து செயல்பட்ட அனைத்து வடகொரிய வீரர்களையும் நாட்டின் மிக உயர்ந்த பிரதிநிதிகளாகத் தான் கருதுவதாகவும் திரு. கிம் கூறினார்.
ரஷ்யாவிற்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டால், வடகொரியா தனது ராணுவ பலத்தை அமெரிக்காவுக்கு எதிராகப் பயன்படுத்தவும் தயங்காது என அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 10,000க்கும் மேற்பட்ட வடகொரிய வீரர்களையும் ஆயுதங்களையும் ரஷ்யாவுக்கு அனுப்பியதாக எந்தவொரு அதிகாரபூர்வத் தகவலையும் வடகொரியா வெளியிடவில்லை.
திரு கிம்மும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் ராணுவ உறவை வளர்ப்பதற்கான உத்திபூர்வப் பங்காளித்துவ ஒப்பந்தத்தில் சென்ற ஆண்டு கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.