வெடிப்பு நிகழும் அபாயத்தை முன்னிட்டு பாரிஸ் ஒலிம்பிக் ஊடக நிலையம் மூடல்
பிரெஞ்சுக் காவல்துறை சனிக்கிழமை (ஜூலை 27) ஒலிம்பிக் ஊடக நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியைத் தற்காலிகமாக மூடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.‘வெடிப்பு’ ஏற்படும் அபாயத்தை முன்னிட்டு அது மூடப்பட்டதாகக் கூறப்பட்டது.
செய்தியாளர்கள் அங்கிருந்துதான் ஒலிம்பிக் விளையாட்டுகள் பற்றிய தகவல்களைச் சேகரித்து ஊடகங்களுக்கு வழங்குவர்.எதனால் அபாயம் ஏற்பட்டது என்ற காரணம் வெளியிடப்படவில்லை. செய்தியாளர்களும் குடிமக்களும் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு அப்பகுதியைக் காவல்துறை மீண்டும் திறந்துவிட்டதாகவும் ஊடக நிலையத்திற்கான அனுமதி வழக்கநிலைக்குத் திரும்பியதாகவும் கூறப்பட்டது.
ரயில் பாதைகளில் புதிதாக நாச வேலை ஏதும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு பிரான்ஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலுக்குப் பிறகு நாட்டின் ரயில்பாதை கட்டமைப்பு தொடர்பான பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டிருப்பதாகப் போக்குவரத்து அமைச்சர் பேட்ரிஸ் வெர்கிரைய்டெ கூறினார்.
ரயில்பாதைக் கட்டமைப்பைக் கண்காணிக்கும் பணியில், 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் 250 பேருடன் ஹெலிகாப்டர்களும் 50 ஆளில்லா வானூர்திகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
தாக்குதல் குறித்த விசாரணை தொடர்வதாகவும் குற்றவாளிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.அந்தத் தாக்குதல் குறித்து உளவுத் துறை எச்சரிக்கை விடுக்கவில்லை என்று கூறிய அவர், ரயில்பாதைக் கட்டமைப்பின் பாதுகாப்பை மேம்படுத்த 5 மில்லியன் யூரோ (S$7.3 மில்லியன்) செலவிடப்பட்டதாகத் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை பாரிசில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவிற்குச் சில மணி நேரம் முன்பாக, பிரான்சின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள ரயில் பாதைகளில் உள்ள கருவிகளுக்கு நாசவேலைக்காரர்கள் தீ மூட்டினர். ஒரு ரயில்பாதையில் அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது.