பாகிஸ்தான் தேசியக் கொடிகள் மற்றும் தொடர்புடைய பொருட்கள் இந்தியாவில் மின்வணிக தளங்களில் விற்பனை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பாகிஸ்தான் தேசியக் கொடிகள் மற்றும் தொடர்புடைய பொருட்களை விற்பனை செய்ததற்காக, அமேசான் இந்தியா, பிளிப்கார்ட், உபுய் இந்தியா, எட்ஸி, தி ஃபிளாக் கம்பெனி மற்றும் தி ஃபிளாக் கார்ப்பரேஷன் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள மின்வணிக தளங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
X பதிவில், மத்திய நுகர்வோர் விவகார அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, மின்வணிக நிறுவனங்களுக்கு அத்தகைய பட்டியல்களை உடனடியாக அகற்றுமாறு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாகவும், விற்பனையை “உணர்ச்சியற்றது” என்றும், தேசிய உணர்வை மீறுவதாகவும் கூறினார்.
“பாகிஸ்தான் கொடிகள் மற்றும் தொடர்புடைய பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாக @amazonIN, @Flipkart, @UbuyIndia, @Etsy, The Flag Company மற்றும் The Flag Corporation ஆகியவற்றுக்கு CCPA நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுபோன்ற உணர்வின்மையை பொறுத்துக்கொள்ள முடியாது. இதுபோன்ற அனைத்து உள்ளடக்கங்களையும் உடனடியாக அகற்றி தேசிய சட்டங்களை கடைபிடிக்குமாறு மின்வணிக தளங்களுக்கு இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது,” என்று மத்திய அமைச்சர் ஜோஷி ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இயங்கும் இ-காமர்ஸ் தளங்களில் பாகிஸ்தான் கொடிகள் மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்வதைத் தடை செய்யுமாறு அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (CAIT) மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பிரஹலாத் ஜோஷிக்கு கடிதம் அனுப்பியதை அடுத்து அமைச்சரின் எச்சரிக்கை வந்துள்ளது.