ஆட மறுக்கும் பாகிஸ்தான்: அடங்க மறுக்கும் ICC!
ICC T-20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின்போது இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி புறக்கணிக்க முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், இது தொடர்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ICC T-20 உலகக்கிண்ண தொடர் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் பெப்ரவரி 7 முதல் மார்ச் 8 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 55 ஆட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்தியாவில் தங்கள் அணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுவதால் தங்களுக்கான ஆட்டங்களை இலங்கையில் நடத்த வேண்டும் என பங்களாதேஷ் அணி கோரிக்கை விடுத்தது.
எனினும், இந்த கோரிக்கையை ICC ஏற்க மறுத்தது. பங்களாதேசுக்கு ஆதரவாக பாகிஸ்தான் வாக்களித்தது.
இறுதியில் பங்களாதேஷ் அணி நீக்கப்பட்டு, ஸ்கொட்லாந்து கிரிக்கெட் அணி உலகக்கிண்ண தொடரில் இணைக்கப்பட்டது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணி T20 உலகக் கிண்ண தொடரில் பங்கேற்பது குறித்த இறுதி முடிவை தங்கள் நாட்டின் அரசே முடிவு செய்யும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் மோசின் நக்வி அண்மையில் தெரிவித்தார்.
பங்களாதேசுக்கு ஆதரவாக உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து சந்தேகத்தை கிளப்பி அச்சுறுத்தல் விடுத்த பாகிஸ்தானுக்கு ஐசிசி கடும் எச்சரிக்கையை அனுப்பியிருந்தது.
இவ்வாறு செய்தால் கிரிக்கெட் உலகிலிருந்து பாகிஸ்தான் முழுமையாக தனிமைப்படுத்தப்படும் என்றும் ICC எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து இந்த தொடரில் பங்கேற்கும் தங்கள் அணி வீரர்களை பாகிஸ்தான் அறிவித்தது.
எனினும், ICC உலகக்கிண்ண தொடரில் பங்கேற்பது தொடர்பில் பாகிஸ்தானின் உறுதியான அறிவிப்பு வெளியாகவில்லை.
சிலவேளை பங்களாதேஷ் அணிக்கு ஆதரவாக உலகக்கிண்ண தொடரை பாகிஸ்தான் புறக்கணிக்கலாம்.
அவ்வாறு இல்லையென்றால் இந்தியாவுக்கு எதிராக பெப்ரவரி 15 ஆம் திகதி நடைபெறும் ஆட்டத்தை மட்டும் பாகிஸ்தான் புறக்கணிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுவருகின்றது.





