லெபனானில் ஒரே நேரத்தில் வெடித்து சிதறிய பேஜர் கருவிகள் – 8 பேர் பலி – 2,750 பேர் படுகாயம்
லெபனானில் ஒரே நேரத்தில் வெடித்து சிதறிய பேஜர் கருவிகளால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் பல்வேறு அரச அதிகாரிகள் தகவல் தொடர்புக்காகப் பயன்படுத்தி வரும் பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின.
இதில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 2,750 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
காசா போர் தொடங்கிய பின்னர், பாதுகாப்பு காரணங்களுக்காக ஹிஸ்புல்லா அமைப்பினர் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அவர்கள் பயன்படுத்தி வந்த பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பேஜர் கருவிகளில் பயன்படுத்தப்படும் லித்தியம் மின்கலங்கள் அதிகமாகச் சூடேறியதால் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளதாகவும், இது இஸ்ரேலின் சைபர் தாக்குதலாக இருக்கலாம் எனவும் ஹிஸ்புல்லா அமைப்பினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் தரப்பிலிருந்து இதுவரை பதிலளிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.