சிறிதரன் எம்.பியை கைது செய்யவேண்டாமென அரச உயர்மட்டத்திலிருந்து உத்தரவு?
“யாழ் தையிட்டியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் (sivagnanam shritharan) கைது செய்யப்படதாது ஏன்?”
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது இது தொடர்பில் இன்று (23) கேள்வி எழுப்பட்டது.
குறித்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் (Department Of Government Information) நடைபெற்றது.
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர்பான அறிவிப்பை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) வெளியிட்ட பின்னர், கேள்வி நேரம் ஆரம்பமானது.
இதன்போது தையிட்டியில் நடந்த போராட்டம் தொடர்பிலும் ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பட்டது.
அவரது கேள்வியும், அதற்கு அமைச்சர் வழங்கிய பதிலும் வருமாறு,
கேள்வி –யாழ்.தையிட்டியில் (jaffna Thaiyiddy) நடந்த போராட்டத்தின்போது ஆன்மீக தலைவர் ஒருவர் (வேலன் சுவாமிகள்) பொலிஸாரால் மிகவும் கொடூரமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும், போராட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே அங்கு இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இப்படியான சம்பவங்களின்போது தமிழ் அரசியல் வாதிகளை கைது செய்ய வேண்டாமென உத்தரவிடப்பட்டுள்ளதா?
பதில் – நீதிமன்ற உத்தரவை மீறி விகாரைக்கு அருகாமையில் சட்டவிரோதமாக ஒன்றுகூடியுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவை மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே கைது இடம்பெற்றுள்ளது.
கைதானவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 26 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்யவேண்டாம் என நாம் உத்தரவிடவில்லை. இது பற்றி பொலிஸார்தான் விளக்கமளிக்க வேண்டும்.
மேலதிக சந்தேக நபர்கள் இருந்தால் அது தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்துக்கு தெளிவுபடுத்தக்கூடும்.” – என்றார்.





