சட்டவிரோதக் குடியேளிகள் தொடர்பில் டிரம்ப் கருத்துக்குக் கட்சிக்குள் எதிர்ப்பு
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியிருப்போர் ராணுவத்தைக் கொண்டு வெளியேற்றப்படலாம் என்று அந்நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள டோனல்ட் டிரம்ப் கூறியிருந்தார்.
டிரம்ப்பின் அக்கருத்துக்கு அவரின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் ரேண்ட் பால் ஞாயிற்றுக்கிழமையன்று (நவட்பர் 24) எதிர்ப்பு தெரிவித்தார்.
“நியூயார்க்குக்குள் ராணுவத்தை அனுப்பினால் ஒரே நேரத்தில் தொடர்ந்து சுடக்கூடிய ஆயுதங்களை வைத்துக்கொண்டு வீரர்கள் அணிவகுப்பர். என்னைப் பொறுத்தவரை அது கொடூரமான காட்சியாகும். அதை நான் எதிர்ப்பேன்,” என்று பால் சிபிஎஸ் ஊடகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.
அமெரிக்காவில் 19ஆம் நூற்றாண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டம் ஒன்றின்படி உள்நாட்டு சட்ட ஒழுங்கு விவகாரங்களுக்கு மத்திய அரசாங்கம் ராணுவத்தைப் பயன்படுத்தக்கூடாது. நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கினால் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக வாழும் குற்றவியல் பின்னணி இருக்கும் குடியேறிகள் வெளியேறற்ப்படுவதைத் தாம் ஆதரிப்பதாக பால் சொன்னார். அதேவேளை, அந்நடவடிக்கையை மேற்கொள்ள ராணுவத்தைவிட சட்ட ஒழுங்கு அதிகாரிகள் கூடுதல் ஆற்றல் வாய்ந்தவர்கள் என்றும் அவர் கருத்துரைத்தார்.
வரும் ஜனவரி மாதம் 20ஆம் திகதியன்று டிரம்ப், அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்பார். அதனைத் தொடர்ந்து அமெரிக்க வரலாற்றில் காணப்படாத வகையில் பெரிய அளவில் சட்டவிரோதக் குடியேறிகளை வெளியேற்றப்போவதாக அவர் உறுதியளித்திருக்கிறார்.