கிவுல் ஓயாத் திட்டத்துக்கு வலுக்கிறது எதிர்ப்பு: கைவிடுமாறு வலியுறுத்து!
கிவுல் ஓயாத் திட்டம் முழுமையாகக் கைவிடப்பட வேண்டும் என்று ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்ணி Democratic Tamil National Alliance வலியுறுத்தியுள்ளது.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் Suresh K. Premachandran இது தொடர்பான வலியுறுத்தலை இன்று (26) விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவரால் விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளவை வருமாறு ,
” கிவுல் ஓயா என்ற ஒரு நீர்ப்பாசனத் திட்டத்துக்கான அணைக்கட்டு ஒன்றைக் கட்டுவதற்கு இப்பொழுது ஆட்சியில் உள்ள அநுரகுமார அரசானது 2 ஆயிரத்து 500 மில்லியன் ரூபாவை முதல் கட்டமாக ஒதுக்கியுள்ளது.
இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் இவ்வேலைத்திட்டமானது 2031ஆம் ஆண்டு முடிவுறுத்தப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
இந்தத் திட்டம் 2011ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் மகாவலி ‘டு’ ஸ்கீமுடன் இணைந்ததாக உருவாக்க முயற்சி செய்தபோதும் பின்னர் அது கைவிடப்பட்டது.
இப்பொழுது இந்த அரசு மீண்டும் அதே திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் விவசாயம் செய்துவரும் பதினைந்துக்கும் மேற்பட்ட சிறிய குளங்களும், அதனை ஒட்டிய வயல் நிலங்களும், வவுனியா வடக்கில் உள்ள பல பழந்தமிழ் கிராமங்களும், அதன் குளங்களும், வயல் நிலங்களும் கிவுல் ஓயாவின் நீரேந்தும் பிரதேசத்துக்குள் மூழ்கடிக்கப் போகின்றன.
இதன் காரணமாக ஏற்கனவே வாழ்வாதாரங்களை இழந்து சிறுகச்சிறுக தமது விவசாயத்தை மேற்கொண்டு வரும் தமிழ் மக்களை மீண்டும் விரட்டியடிக்கும் நிலை தோன்றியுள்ளது.
எம்மைப் பொறுத்தவரையில், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டத்தின் குடிசனப் பரம்பலை மாற்றியமைக்கக்கூடிய தமிழ் மக்களை மீண்டும் அந்த மண்ணிலிருந்து விரட்டியடித்து ஏதிலியாக்கக்கூடிய இந்த நீர்ப்பாசனத் திட்டம் நிறுத்தப்பட வேண்டும்.
உண்மையில் ஜனாதிபதி நாட்டின் ஒருமைப்பாட்டையும் மக்களிடையே நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த விரும்பினால் இந்தத் திட்டத்தை முற்றுமுழுதாகக் கைவிடவேண்டும் என்று கோருகின்றோம்.” – என்றுள்ளது.





