அநுரவின் யாழ். உரைக்கு வலுக்கிறது எதிர்ப்பு!
இலங்கையில் அனைத்து இன மக்களும் நல்லிணக்கத்துடனேயே வாழ்கின்றனர். எனவே, இல்லாத இனவாதம் பற்றி கதைப்பதுதான் பிரச்சினை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி SJP சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் S.M. Marikar மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளுக்கு விஜயம் செய்யும்போது அந்தந்த பகுதி மக்களை திருப்திபடுத்தும் வகையில் ஜனாதிபதி கருத்துகளை முன்வைத்துவருகின்றார்.
இது ஏற்புடையது அல்ல. அரசாங்க தலைவர் பொது கொள்கையுடன் பயணிக்க வேண்டும். நாட்டில் எந்த பகுதிக்கு சென்றாலும் ஒரே கொள்கை அடிப்படையிலேயே கருத்துகளை முன்வைக்க வேண்டும்.
ஆனால் தமிழ் டயஸ்போராக்களை திருப்திப்படுத்தும் விதத்திலேயே வடக்குக்கு சென்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றுகின்றார்.
நாட்டில் அனைத்து இன மக்களும் நல்லிணக்கத்துடன்தான் வாழ்கின்றனர். எனவே, இனவாதத்தை தோற்றுவிக்கும் விதத்தில் கருத்துகளை எவரும் முன்வைக்ககூடாது.
அநுரகுமார திஸாநாயக்க என்பவர் எதிர்க்கட்சி தலைவர் அல்லர், அவர் நாட்டின் ஜனாதிபதி. ஆகவே, பொறுப்புடன் கருத்துகளை வெளியிட வேண்டும்.” – என்றார் எஸ்.எம்.மரிக்கார்.
அதேவேளை, நாமல் ராஜபக்ச, விமல்வீரவன்ச உள்ளிட்டவர்களும் ஜனாதிபதி யாழில் ஆற்றிய உரைக்கு எதிர்வினை ஆற்றியுள்ளனர்.





