தொடர்கிறது “ஆபரேஷன் சிந்தூர்”: பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை!
“பயங்கரவாதத்துக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது.எனவே, பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்.”
இவ்வாறு இந்திய இ ராணுவ தளபதி உபேந்திர திவேதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜனவரி 15 ஆம் திகதி இராணுவ தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் அது தொடர்பில் டெல்லியில் நேற்று செய்தியாளர் மாநாடு நடைபெற்றது.
இதன்போதே இந்திய இராணுவத் தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“ காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி, எல்லைக்கு அருகே பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த 9 தீவிரவாத முகாம்கள் மீது முப்படைகளும் இணைந்து துல்லியமாக தாக்குதல் நடத்தின.
இதற்கு பதிலடி தர முயன்ற பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டமைப்புகள் மற்றும் விமானப்படை தளங்களை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டது.
அதில் அவர்களுக்கு மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது. 100-க்கும் மேற்பட்ட அந்நாட்டு வீரர்கள் உயிரிழந்தனர்.” எனவும் இந்திய இராணுவத் தளபதி தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூர் மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
எதிரியின் எல்லைக்குள் நுழைந்து தாக்கியதுடன், தீவிரவாதக் கட்டமைப்புகளை அழித்து, பாகிஸ்தானின் நீண்டகால அணுஆயுத மிரட்டல் போக்கையும் தகர்த்தோம்.
இந்த சூழ்நிலையில், பாகிஸ்தானை ஒட்டிய எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே இன்னமும் 6 தீவிரவாத முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.
இதுபோல சர்வதேச எல்லைக்கு அப்பால் 2 முகாம்கள் செயல்படுகின்றன.
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவுக்கு வரவில்லை, தொடர்கிறது. வருங்காலத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அத்துமீற முயற்சி செய்தால் தக்க பதிலடி தரப்படும்.
தரைவழியாக நடத்தப்படும் தாக்குதலை முறியடிக்கவும் இந்திய ராணுவம் தயாராக உள்ளது. “ – என அவர் மேலும் கூறினார்.





