இலங்கையில் அச்சுறுத்தலாக மாறும் ஒன்லைன் மோசடி – 167 பேர் இதுவரை கைது
இலங்கையில் ஒன்லைன் மூலம் மோசடி செய்த 30 சீன பிரஜைகள் உட்பட 167 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் பெண்ணொருவரும் அடங்கியுள்ளனர்.
இக்குழுவினர் BITCOIN ஊடாக இணையத்தில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்தமை முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் தங்கியிருந்து ஒன்லைனில் பணம் மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெருமளவான வெளிநாட்டவர்கள் அவ்வப்போது கைது செய்யப்பட்டனர்.
நேற்று முன் தினமும் இவ்வாறான மோசடி தொடர்பாக 137 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டதுடன் பல மடிக்கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றினர்.
இவ்வாறான மோசடி தொடர்பில் தகவல் தெரிந்தால் தமக்கு அறிவிக்குமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
வீடுகளை வாடகைக்கு விடும்போது பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.