அமெரிக்காவில் பல்கலைகழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி, 16 பேர் காயம்
தெற்கு அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள டஸ்கேகி பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர் என்று பல்கலைக்கழகம் செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்டவர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் அல்ல என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“டஸ்கேகி பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்து ஓபிலிகாவில் உள்ள கிழக்கு அலபாமா மருத்துவ மையம் மற்றும் மாண்ட்கோமரியில் உள்ள பாப்டிஸ்ட் சவுத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று அது மேலும் கூறியது.
காயமடைந்தவர்களில், ஒரு மாணவி வயிற்றில் சுடப்பட்டதாக டஸ்கி நகர காவல்துறைத் தலைவர் மார்டிஸ் தெரிவித்தார்.
கைது எதுவும் அறிவிக்கப்படவில்லை. துப்பாக்கிச் சூட்டுக்கு என்ன காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று மார்டிஸ் மேலும் கூறினார்.