இந்திய நாடாளுமன்றத்தில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா தாக்கல் ; வாபஸ் பெற காங்கிரஸ் வலியுறுத்தல்

இந்தியாவில் நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே காலகட்டத்தில் தேர்தல் நடத்த வழிவகை செய்யும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்டத்தை அமல்படுத்துவதற்கான அரசியலமைப்பு (129வது திருத்தம்) மசோதா இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு ஆதரவாக 269 உறுப்பினர்களும் எதிராக 198 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.அடுத்து, மசோதா நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளது.
அந்தத் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய முன்னாள் அதிபர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை, அத்திட்டம் நாட்டுக்கு நன்மை பயக்கும் எனத் தெரிவித்துள்ளது. மசோதாவை நிறைவேற்ற அரசியல் சாசனத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களையும் அது சுட்டியது. திருத்தங்களை மத்திய அமைச்சரவை ஏற்றது.அதையடுத்து மசோதாவை சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) மன்றத்தில் தாக்கல் செய்தார்.
மசோதாவை எதிர்ப்பதாக ஏற்கெனவே கூறியிருந்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நடந்த விவாதத்தில் தங்கள் எதிர்ப்பை வலுவாக முன்வைத்தன.“இந்த மசோதா அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாட்டின்மீது தாக்குதல் நடத்துகிறது. இந்த மசோதாவை பரிசீலிப்பது இந்த அவையின் சட்டத் திறனுக்கு அப்பாற்பட்டது. அதைத் திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்,” என்று காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி கூறினார்.
திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி, “அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை பாதிக்கிறது. சட்டப்பிரிவு 82, துணைப்பிரிவு 5 ஆகிய அனைத்து அதிகாரத்தையும் தேர்தல் ஆணையத்துக்கு வழங்குகிறது. உலகம் அழியும் வரை ஒரே கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது,” என்றார்.
மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று திமுக எம்பி டி.ஆர். பாலு வலியுறுத்தினார். அதற்கு மத்திய அரசு தயார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
இதையடுத்து, இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்குழு 90 நாடள்களில் மசோதா குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும். தேவைப்பட்டால் காலக்கெடு நீட்டிக்கப்படும். கூட்டுக்குழுவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இருப்பதால் அங்கு இந்த மசோதா ஏற்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்த மசோதா மக்களவை, மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டு, வாக்கெடுப்புக்கு விடப்படும்.
அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும். நாடாளுமன்றத்தின் ஆளும் பாஜகவுக்கு 240 இடங்களே உள்ளன. பெரும்பான்மையைப் பெற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தேவை.