பிரான்சில் திருமண நிகழ்வில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
வடகிழக்கு பிரான்சில் துருக்கிய திருமண நிகழ்வில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தியோன்வில்லில் உள்ள வரவேற்பு இடத்திற்கு வந்த மூன்று ஆயுதம் ஏந்திய, முகமூடி அணிந்த நபர்கள் விருந்தினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் அடங்குவதாகவும், காயமடைந்தவர்களில் மூவர் ஆபத்தான நிலையில் அருகிலுள்ள பெல்-ஏர் மருத்துவமனையில் இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
ஜெர்மனி மற்றும் லக்சம்பர்க் எல்லைக்கு அருகில் உள்ள லோரெய்ன் பகுதியில், துப்பாக்கி ஏந்திய நபர்கள் 4×4 காரில் நிகழ்விற்கு வந்தபோது, ஈடன் பேலஸில் சுமார் 100 பேர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
“காலை ஒன்றரை மணியளவில், ஒரு குழு மக்கள் மண்டபத்தின் முன் புகைபிடிப்பதற்காக வெளியே சென்றனர், பின்னர் மூன்று கனரக ஆயுதம் ஏந்திய நபர்கள் அவர்கள் திசையில் துப்பாக்கிச் சூடு நடத்தினர்” என்று தெரிவிக்கப்பட்டது.