அமெரிக்காவில குடியரசுக் கட்சியின் மாநாட்டிற்கு அருகில் கத்தியுடன் இருந்த நபரை சுட்டு கொன்ற அதிகாரிகள்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனல்ட் டிரம்ப் கொலை முயற்சியிலிருந்து அண்மையில் தப்பியிருக்கும் வேளையில் மற்றொரு சம்பவத்தில் கத்தியுடன் இருந்த நபரை அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.
மில்வாக்கியில் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு ஜூலை 15ஆம் திகதியிலிருந்து நடைபெற்று வருகிறது.இந்த மாநாட்டில்தான் டொனல்ட் டிரம்ப் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார். இதனால் நாடு முழுவதிலுமிருந்து 50,000க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொள்கின்றனர்.இதையொட்டி மாநாடு நடைபெறும் இடத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஃபிசர்வ் ஃபாரம் என்ற இடத்தில் குடியரசுக் கட்சியின் மாநாடு நடைபெறுகிறது. இங்கிருந்து 1.7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் ஜூலை 16ஆம் திகதி துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில் உடலில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவான காட்சிகளை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
அதில் அதிகாரிகள், கத்தியைக் கீழே போடு என்று கத்திக்கொண்டே, நபரை நோக்கி ஓடுகின்றனர். அதை கேட்காததால் நபரை நோக்கி அதிகாரிகள் சுடத் தொடங்கினர். அதன் பிறகு அந்த நபர் கத்தியைக் கீழே போடுகிறார்.
உள்ளூர் அதிகாரிகளுக்கு உதவி செய்வதற்காக நாடு முழுவதிலுமிருந்தும் மில்வாக்கிக்கு 4,500 அதிகாரிகளைக் கொண்ட ஒரு படையே உருவாக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கொலம்பஸ் அதிகாரிகள் செயல்படுகின்றனர்.
“சம்பவ இடத்திலிருந்து இரண்டு கத்திகளை மீட்டுள்ளோம்,” என்று மில்வாக்கி காவல்துறையின் தலைவர் ஜெஃப்ரி பி. நோர்மன் கூறினார்.சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் பெயரை அதிகாரிகள் வெளியிடவில்லை.மில்வாக்கி குடியிருப்பாளரான அவருக்கு வயது 43 என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டது.
இவ்வாரம்இல்லினாய்ஸ், ஓஹையோ, மேரிலாண்ட் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து வந்துள்ள அதிகாரிகள், மில்வாக்கி நகர மையத்தில் பாதசாரிகளுக்கு வழிகாட்டுவது, சோதனைச் சாவடிகளைக் காவல்காப்பது, ஆர்ப்பாட்டங்களைக் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.துப்பாக்கிச் சூடு, மில்வாக்கி கவுன்டி சமூக சேவைக் கட்டடத்துக்கு அருகே கிங் பார்க் என்ற குடியிருப்புப் பகுதியில் நடைபெற்றது.
சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த அமெரிக்க ரகசிய சேவையின் பேச்சாளரான அலெக்ஸி வொர்லி, பாதுகாப்பு வளையத்துக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகத் தெரிவித்தார்.மில்வாக்கியின் புறநகர்ப் பகுதியான கிரின்ஃபீல்ட் காவல்துறை அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே சுட்டுக் கொல்லப்பட்ட சாமுவேல் ஷார்ப்பே என்று அடையாளம் காணப்பட்ட நபரின் குடும்பத்தாரும் நண்பர்களும் கிங் பார்க்கில் கூடி மெழுகுவத்தி ஏந்தி அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.மேலும் சிலர் காவல்துறையின் செயலுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘முழு காணொளியை வெளியிடுக’ என்று எழுதப்பட்ட பதாகையை குடியிருப்பாளர் ஒருவர் கையில் ஏந்தியிருந்தனர்.