ஒடிசா புகையிரத விபத்து! திடீரென வந்த துர்நாற்றம்: அச்சத்தில் மக்கள்
ஒடிசாவில் புகையிரத விபத்து நடைபெற்ற இடத்தில் கிடந்த ஒரு பெட்டிக்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் சில சடலங்கள் உள்ளே கிடக்கலாம் எனவும் உள்ளூர் மக்கள் அச்சம் தெரிவித்த நிலையில், இந்த தகவலை ரயில்வே மறுத்துள்ளது.
அதோடு துர்நாற்றம் வீசியதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளது.
குறிப்பாக விபத்தில் உயிரிழந்து சில உடல்கள் மீட்கப்படாமல் இன்னும் அங்கே கிடப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர். இது அப்பகுதி முழுவதும் பரவி பரபரப்பையும் ஏற்படுத்தியது.
. இதைத்தொடர்ந்து புகையிரத அதிகாரிகள், மாநில அரசு உதவியுடன் அந்தப் பெட்டியில் மீண்டும் சோதனை மேற்கொண்டனர். இதன்பிறகு விளக்கம் அளித்த புகையிரத அதிகாரிகள், ரயில் பெட்டியில் இருந்து வரும் துர்நாற்றத்துக்குக் காரணம் அழுகிய முட்டைகள்தான் என்றும், மனித உடல்கள் அல்ல” என்று விளக்கம் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக தென்கிழக்கு ரயில்வேயின் சிபிஆர்ஓ ஆதித்ய குமார் சவுத்ரி கூறுகையில், புகையிரத பெட்டியில் இருந்து வந்த துர்நாற்றத்துக்கு காரணம் அழுகிய முட்டைகள் தான். மனித உடல்கள் கிடையாது. யஷ்வந்த்பூர் ஹவுரா எக்ஸ்பிரஸின் பார்சல் வேனில் 3 டன் முட்டைகள் கொண்டு செல்லப்பட்டன. அனைத்து முட்டைகளும் அழுகி விட்டதால் துர்நாற்றம் வீசியிருக்கிறது. விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து மூன்று டிராக்டர்களில் முட்டைகளை அகற்றியுள்ளோம்” என்றார்.
மேற்கு வங்காளத்தில் உள்ள ஷாலிமர் புகையிரத நிலையத்தில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 2 ஆம் திகதி ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா புகையிரத நிலையம் அருகே விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில், 288 பேர் பலியாகினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இந்த புகையிரத விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டது. புகையிரத விபத்து நடைபெற்ற இடத்தில் இரவு பகலாக கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் மீட்பு பணி நடைபெற்றது.
மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையும் ஒடிசா பேரிடர் மீட்பு குழுவும் ஈடுபட்டது. மீட்பு பணிகள் முடிந்த பிறகு உடனடியாக தண்டவாளங்கள் சரி செய்யப்பட்டு மறு சீரமைப்பு பணிகளும் நடைபெற்றன.