நுகேகொடை கூட்டு அரசியல் சமர்! பிரதான கட்சிகள் கைவிரிப்பு!! 12 பிரதான கட்சிகள் பங்கேற்க மறுப்பு!!
நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள பேரணியில் பங்கேற்பதில்லை என எதிரணியிலுள்ள பிரதான கட்சிகள் திட்டவட்டமாக அறிவித்துவிட்டன.
இதனால் கூட்டு எதிரணி எனக் கூறிக்கொள்ளும் தரப்பின் அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் சமர் வலுவிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுமே இக்கூட்டத்துக்குரிய அறைகூவலை விடுத்து, அதற்குரிய நகர்வுகளை முன்னெடுத்தன. இது தொடர்பில் எதிரணிகளுடன் பேச்சும் நடத்தப்பட்டது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயலுக்கு எதிராகவும், வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியுமே எதிர்ப்பு கூட்டம் நடத்தப்படுகின்றது என மொட்டு கட்சி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது. இது எதிரணிகளின் கூட்டு அரசியல் சமர் எனவும் அறிவிப்புகள் விடுக்கப்பட்டிருந்தன.
ஆனால் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இதில் பங்கேற்பதில்லை என தீர்மானித்துவிட்டது. நாடாளுமன்றத்தில் உள்ள மூன்றாவது பெரிய கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியும் நுகேகொடை கூட்டம் தொடர்பில் கைவிரிப்பு செய்துள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உட்பட தமிழ்த் தேசியக் கட்சிகளும் மேடையேற மறுத்துள்ளன.
மலையகத்திலுள்ள பிரதான இரு கட்சிகளான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி என்பனவும் நுகேகொடை கூட்டத்தக்கு நேசக்கரம் நீட்டுவதற்கு தயாரில்லை. தமது கட்சிகள் பங்கேற்காது என அக்கட்சிகளின் உறுப்பினர்கள் அறிவித்துவிட்டனர்.
எதிரணி பக்கம் உள்ள திலித் ஜயவீர தலைமையிலான சர்வஜன அதிகாரம், சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணி என்பனவும் கைவிரிப்பு செய்துள்ளன. விமல்வீரசன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியும் பங்கேற்காது.
அதேபோல ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பனவும் பேரணியில் பங்கேற்காது என தெரியவருகின்றது.
முன்னிலை சோசலிசக் கட்சி உள்ளடங்கலான மக்கள் போராட்ட இயக்கமும் இக்கூட்டத்துக்கு ஆதரவில்லை என அறிவித்துள்ளது.
மூன்று எம்.பிக்களை கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பிவிருது ஹெல உறுமய உள்ளிட்ட சில கட்சிகளே நுகேகொடை கூட்டத்தில் பங்கேற்கின்றன. அவற்றுக்கு ஆதரவளிக்கும் தொழிற்சங்கங்கள், அமைப்புகள் மற்றும் தேசிய வாத அமைப்புகளும் களமிறங்கவுள்ளன.





