பருவகால தொழிலாளர் விசா தொடர்பில் பிரித்தானியா வெளியிட்டுள்ள அறிவிப்பு
பிரித்தானியா, Seasonal Worker visa என்னும் பருவகாலப் பணியாளர் விசா வழங்குவதை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளது.அதாவது, 2029ஆம் ஆண்டுவரை, நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவானது “வணிகங்களை திறம்பட திட்டமிடுவதற்கும், தானியங்கி தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதற்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நம்பியிருப்பதிலிருந்து விலகிச் செல்வதற்கும்” எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விசா மூலம் பிரித்தானியாவுக்கு வந்து, இரண்டு வகையான பணிகள் செய்யலாம்.ஒன்று தோட்டத்துறையில் ஆறு மாதங்களுக்கு பழங்கள், காய்கறிகள் மற்றும் மலர்கள் பறிக்கும் பணி.
இரண்டு, கோழிப்பண்ணையில் சுமார் மூன்று மாதங்கள் பணி. இந்த பழங்கள், காய்கறிகள் பறிக்கும் பணிக்கு எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம், கோழிப்பண்ணையில் பணி செய்ய ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 15ஆம் திகதிவாக்கில் விண்ணப்பிக்கவேண்டும்.
உணவு விநியோகத்துறையில் நிலவும் பணியாளர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காகவே இந்த பருவகால தொழிலாளர் விசா பாதை 2025 முதல் 2029 வரை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் தோட்டக்கலைத் துறைக்கு 43,000 விசாக்களும், கோழிப்பண்ணைகளுக்கு 2,000 விசாக்களும் கிடைக்கும்.
பிரித்தானிய அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நம்பியிருப்பதைக் குறைக்கவும், இந்தத் துறையில் தானியங்கி தொழில்நுட்ப பயன்பாட்டிற்கான ஆதரவை அதிகரிக்கவும், அதே நேரத்தில் பிரிட்டிஷ் தொழிலாளர்களை விவசாயத்தில் ஊக்குவிப்பதற்குமே இந்த விசா நீட்டிப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.